Saturday, July 31, 2021

குட்டி கதை‌ -‌ வியாபார தந்திரம்


ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதி வண்டியில் சென்றான். கல் தடுக்கி மிதி வண்டியுடன் விழுந்து விட்டான். முட்டைகள் அணைத்தும் உடைந்து விட்டன. கூட்டம் கூடி விட்டது. வழக்கம் போல் இலவச உபதேசங்கள். பாத்து போக கூடாதா?  என்னடா... கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?"

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா..., ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன் தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு தம்பி இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள். உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள், வாங்கிக் கொள் என்றார். மக்களும் இவரது செய்கை பேச்சை பார்த்து பணம் தந்தார்கள்.

முட்டை உடைந்ததைவிட அதிக பணம் சேர்ந்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர். அப்போது ஒருவர் அந்த பையனிடம் தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளிகிட்டே என்ன பாடு படுவயோ? என்றார். பையன் சிரித்துக் கொண்டே சொன்னான். அந்த பெரியவர்தான் சார் என் முதலாளி

இது வியாபார தந்திரமல்ல... ஏமாற்றுவது

🌹🌺வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான் - பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லும் எளிய கதை 🌹🌺

🌺🌹ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்ற னர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். 

🌹வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.

🌹அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.
 
🌹அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.
 
🌹மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான். 

🌹அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்
போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.

🌹அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.

🌹 அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.

🌹அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

🌹இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.

🌹அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார். அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை. 

🌹பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.

🌹மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் ஸ்ரீ கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.

 🌹அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம். உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.

🌹ஸ்ரீ கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார். ஸ்ரீ கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.

🌹கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.🐛
 ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர். 

🌹இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.

 🌹அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான். நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது. 

🌹நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது. வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.

எம்ஜிஆர் கிருஷ்ணர் மாதிரி, கத்தி சண்டை போட்டாலும் சிரிச்சிக்கிட்டே கத்தாம சண்டை போடுவார்.... சாரி சற்று விளையாடிவிட்டு வருவார்....


குட்டி கதை - வெற்றி

ஒரு ஊரில் மக்கள் மத்தியில் புத்தர் பேசத் தொடங்கினார். ஒரு குரல் அவர் பேசுவதை இடைமறித்தது. தொடர்ந்து புத்தரை நோக்கி, புத்தரே நாங்கள் உங்களைப் போன்ற எத்தனையோ ஞானிகளைச் சந்தித்தும், அவர்களது பிரசங்கங்களை கேட்டும் விட்டோம். ஆனால் எங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை. இப்போதும் எங்களுக்கு பிரச்சனை இருக்கிறது.
எங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதனால் எல்லோருடைய சிக்கலும் தீரும்படியாக, அனைத்து மனிதர்களுடைய வாழ்விலும் பிரகாசம் தெரியும்படி மந்திரங்களைச் சொல்லித் தாருங்கள். 

தேவையற்ற பிரசங்கம் வேண்டாம். நாங்கள் மனப்பாடம் செய்து எல்லோருக்கும் சொல்லத்தக்க அளவில் சிறியதாக இருக்க வேண்டும். நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான மந்திரத்தைச் சொல்லுங்கள்.
உங்களைக் குருவாக ஏற்றுக்கொள்கிறோம் என்றது அக்குரல்.

மௌனமாக சிரித்த புத்தர், *இதுவும் கடந்து போகும்‬* என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். அந்த கணமே அக்கூட்டம் ஆடாமல் அசையாமல் அப்படியே அமர்ந்தது. புத்தரின் மந்திரத்தை மனசுக்குள் அசைபோட்டது. நன்றாகப் படித்திருந்தும் பணம் சம்பாதிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையால் உழன்று கொண்டிருந்த இளைஞனுக்கு தன்னம்பிக்கையைத் தந்தது அந்த வார்த்தை.

இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தையால் என்னுடைய நிலை கண்டிப்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இம்மந்திரத்தைத் தினந்தோறும் உச்சரித்து இன்னமும் எனக்கு வேண்டிய பலம் பெற்றுக்கொள்வேன் என்று உரக்கச் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். இம்மந்திரத்தால் என்னுடைய நீண்ட கால நோய் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இனி மேலும் எனக்கு இந்நிலை தொடராது. இது மிகவும் நல்ல மந்திரம் என்று கூறிச் சென்றான் நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்தவன். இந்த பணம் தொடர்ந்து என்னுடன் இருக்காது என்பதைப் புத்தர் எனக்கு இம்மந்திரத்தின் மூலம் புரிய வைத்துவிட்டார். இனி இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன் என்று கூறிச் சென்றான் பணக்காரனாக இருந்தவன்.

அடுத்து இருந்த அழகான பெண், என்னுடைய அழகு எப்போதும் என்னுடன் வராது என்பதை இம்மந்திரம் எனக்குப் புரிய வைத்துவிட்டது என்று கிளம்பினாள்.
கடைசியாக, தினந்தோறும் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பெண்மணி கிளம்பும் போது, இத்தனை நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். மரணம் வரையிலும் உழைக்கத்தான் வேண்டியிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்த மந்திரத்தின் மூலம் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னுடைய நிலையும் மாறிவிடும் என்று நம்பிக்கையுடன் சென்றாள்.

ஆம், நண்பர்களே.,
தோல்விகள் தழுவும்போது
இதுவும் கடந்து போகும் என நம்புங்கள்...

வெற்றி நிச்சயம்…

Friday, July 30, 2021

பிரியாணியின் கதை



பெர்சிய போர் வீரர்களின் உணவு நம் ஃபேவரிட் ஆனது எப்படி?! இது பிரியாணியின் கதை

`பிரியாணி' என்ற வார்த்தையைக் கேட்டதும் பெரும்பாலானோருக்கு ஐம்புலன்களும் நடனமாடும். அப்படிப்பட்ட இதன் சொந்த ஊர் இந்தியா அல்ல என்பதுதான் நிதர்சனம்! இவற்றின் அசல் பிறப்பிடம் எது என்ற ஆதாரம் இல்லையென்றாலும், பெரும்பாலான ஆய்வாளர்கள் நம்பும் வரலாறு மற்றும் இந்தியாவின் பிரபல பிரியாணிகளின் ஸ்பெஷாலிட்டி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இங்கே...

வரலாறு:
பெர்சிய நாட்டுப் போர்வீரர்களின் உணவே இன்று நாம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் `பிரியாணி'. போருக்காக நாட்டைவிட்டு வெகுதூரம் பயணம் செய்யும் வீரர்கள், கையில் கொஞ்சம் அரிசி மற்றும் மசாலாப் பொருள்களை எடுத்துச் செல்வது வழக்கம். போர் நேரம் முடிந்தவுடன், காட்டுக்குள் சென்று அங்கு இருக்கும் மிருகங்களை வேட்டையாடி, ஓய்வெடுக்கும் இடத்துக்குக் கொண்டுவருவார்கள். பிறகு, நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மசாலா கலவையை, மாமிசம் மீது தடவி, இரவு முழுவதும் ஊறவைத்துவிடுவர். அதிகாலையில், நன்கு ஊறிய மசாலா மாமிசத்தை, அரிசியோடு கலந்து தண்ணீர் ஊற்றி கனமான பொருளைக்கொண்டு இறுக்கமாக மூடிவிடுவர். பிறகு, ஆழமான குழியில் தீ மூட்டி, இந்தக் கலவைப் பாத்திரத்தை அதன் மீது வைத்து அடைத்துவிடுவார்கள். நண்பகல் போருக்குச் செல்வதற்கு முன், நன்கு வெந்து இருக்கும் இந்தச் சாதத்தைச் சாப்பிடுவார்கள்.

முதலில் வெறும் மசாலாவை மட்டுமே உபயோகப்படுத்திய வீரர்கள், பிறகு நறுமணத்துக்காக அந்நாட்டில் கிடைக்கக்கூடிய சில வாசனைப்பொருள்களைச் சேர்க்க ஆரம்பித்தனர். இப்படி போர் வீரர்கள் சாப்பிட்ட இந்தக் கலவைச் சாப்பாடு, நாளடைவில் அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களால் விரும்பிச் சாப்பிடும் உணவாக மாறியது. அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணித்த முகலாயர்களால் கலவை உணவு, மன்னர் குடும்பம் மட்டும் உண்ணும் `பிரியாணியாய்' உருவெடுத்தது.

போர்வீரர்களுக்குப் போதுமான அளவு சத்துடைய உணவு இல்லாததைக் கண்ட ஷாஜஹானின் மனைவி மும்தாஜ், போர்வீரர்களுக்கு பிரியாணியின் செய்முறையைக் கற்றுக்கொடுத்தார். அன்று முதல், இஸ்லாமியர்கள் ஆட்சிசெய்த இடங்களிலெல்லாம் பிரியாணி பரவியிருந்தது. ஹைதராபாத் நிஜாம் ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலில் இதில் நெய் சேர்க்கும் முறை உருவானது. பிரிட்டிஷ் ஆதிக்கம் அதிகம் இருந்ததால், அவர்களுக்குப் பரிமாறப்படும் பிரியாணிகளில் நெய் சேர்த்து வழங்கினர். பிறகு, இடத்துக்கு ஏற்றார்போல் பல்வேறு வகையான பிரியாணிகள் உருவாகின. அரண்மனைச் சமையலறை வரை மட்டுமே பரவியிருந்த இதன் ரெசிபி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பொதுமக்களுக்கும் போய்ச்சேர்ந்தது.

வரலாறு ஒருபக்கம் இருக்கட்டும். திண்டுக்கல் முதல் லக்னோயி வரை ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் தனித்துவம் என்ன என்பதை இனி பார்ப்போம்...

திண்டுக்கல் :

பிரியாணி என்றாலே நீள அரிசியான `பாசுமதி' வகை அரிசியில் இருப்பதுதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி என்றாலே பொடிப்பொடியாக இருக்கும் `சீரக சம்பா' அரிசி வகைதான். சீரக சம்பா அரிசியின் மணம் நிச்சயம் அனைவருக்கும் வித்தியாச மணமாக இருக்கும். வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான மிளகுத்தூள் இதில் உபயோகப்படுத்தியிருப்பார்கள். இதில் நீளமான இறைச்சித் துண்டுகளைப் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை. குழந்தைகளும் எளிதில் உண்ணக்கூடிய சிறிய இறைச்சித் துண்டுகள், தயிர் மற்றும் எலுமிச்சை சாரின் 'Tangy' டேஸ்ட் இந்த அருமையான திண்டுக்கல் சீரக சம்பா பிரியாணியில் நிறைந்திருக்கும்.

ஆம்பூர் :

சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில், தூங்கிக்கொண்டிருப்போரையும் சுண்டி இழுக்கும் இடம் ஆற்காடு. பாரம்பர்யமிக்க அசல் ஸ்டார் பிரியாணி இங்குதான் கிடைக்கும். ஆற்காடு நவாப் குடும்பத்துக்குச் சமைத்துக் கொடுத்த அனுபவத்திலிருந்து தொடங்கியதுதான் இந்த ஆம்பூர் வகை பிரியாணி. சிக்கன், மட்டன், பீஃப் மற்றும் இறால் போன்ற இறைச்சிகளோடு சுவையான ஆம்பூர் பிரியாணியின் தனித்துவம், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் புதினா மற்றும் மல்லித்தழைகள்தான். அதுமட்டுமல்லாமல், புளிக்காத புதிய தயிரில் இறைச்சியை நன்கு ஊறவைத்து, பிறகு சாதத்துடன் சேர்ப்பதால் தனி ருசியை இதில் உணரலாம்.

ஹைதராபாதி :

இந்தியாவில் பிரியாணி என்றாலே ஹைதராபாதிதான். முகலாயர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த ஹைதராபாத்தில், பிரியாணியின் ஆதிக்கமும் குறைவில்லாமல் இருக்கிறது. ஹைதராபாத் நிஜாம் சமையலறையில் உருவான இந்தப் பிரியாணியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இறைச்சியை மசாலாவோடு கலந்து இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் அரிசியோடு கலந்து தயாராவது 'கச்சி பிரியாணி'. இறைச்சி மற்றும் மசாலாவை ஊற வைத்து உடனே வேகவும் வைத்து, தயாரான கிரேவியை சாதத்தோடு கலப்பது 'பக்கி பிரியாணி'. குங்குமப்பூ மற்றும் தேங்காய் சேர்க்கப்படும் இதில், விதவிதமான நறுமணப்பொருள்களும் சேர்க்கப்படுகின்றன. இவையே இதற்கு தனித்தன்மையைக் கொடுக்கின்றன. இதற்கு பெஸ்ட் காம்பினேஷன், கத்திரிக்காய் தொக்கு.

தலசேரி:

கீமா அரிசி சாதம், முந்திரி, திராட்சை போன்றவற்றோடு நன்கு சமைத்த இறைச்சி மசாலாவைச் சேர்த்தால் `தலசேரி பிரியாணி' ரெடி. மற்ற வகைகள்போல இல்லாமல், மலபார் அல்லது தலசேரிவகை பிரியாணி முற்றிலும் வித்தியாசமானது. பாசுமதி அரிசி வகையை இவர்கள் என்றுமே உபயோகிக்க மாட்டார்கள். முகலாயர்கள் மற்றும் மலபார் உணவு வகையின் பொருள்கள் ஒருசேரக் கலந்து புதுமையான சுவையைத் தருகிறது. உண்ணும் நேரத்தில்தான் கிரேவியோடு சாதம் கலக்கப்படும். இதனால், சுவைக்கேற்ப தேவையான மசாலாவை உபயோகித்துக்கொள்ளலாம்.

லக்னோயி :

இதுதான் பெர்சியன் ஸ்டைல் பிரியாணி. அதாவது, `தம் பிரியாணி'. முதலில் கிரேவி மற்றும் இறைச்சியைப் பாதியளவு வேகவைத்து, பிறகு கனமான பொருளைக்கொண்டு இறுக்கி அடைத்து அதன்மேல் சுடச்சுட கரித்துண்டுகளைப் பரவி, அதன் சூட்டில் ரெடியாவது `தம் பிரியாணி'. இதில் மேற்கத்திய நாட்டு மசாலா அதிகம் பயன்படுத்துவதால், மற்ற பிரியாணிகளைவிட காரம் குறைவாக இருக்கும்.

ருசியான உணவு என்பதால், பலர் தினமும் இதைச் சாப்பிடுவதை வழக்கமாகிக்கொண்டுள்ளனர். எதையும் அதிகம் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.




Wednesday, July 28, 2021

குட்டி கதை - பலன்

வருஷம்பூரா பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், திடீர் புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப் பட்டதால் மனம் வெறுத்துப் போன ஒரு விவசாயி கடவுள்கிட்டே கேட்டான், ஏன் ஆண்டவனே உனக்குக் கொஞ்சமாச்சும் மூளை இருக்கா? மழையை அளவாப் பெய்ய வைச்சா என்ன? ஏன் இப்பிடி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களையெல்லாம் அழிக்கறே... 

அதே மாதிரி காத்து அடிச்சாப் பத்தாதா? புயலாய்த்தான் அடிக்கணுமா? வெயில் அடிச்சாப் பரவாயில்லே... ஒரேயடியா இப்பிடி வறட்சி வர வைக்கணுமா? உனக்கு பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு கொஞ்சம் கூடத் தெரியலை... எங்கிட்டே அந்த சக்தியைக் கொடு. உற்பத்தியைப் பெருக்கி நாட்டில் சுபிட்சத்தை உண்டாக்கிக் காட்டறேன்னு சவால் விட்டான். கடவுளும் சரி உன் இஷ்டம். இனி இயற்கை உன் சொல்படி நடக்கும்னு அவனுக்கு சக்தியைக் கொடுத்தார். 

அன்னேலேர்ந்து அந்த விவசாயி இட்ட கட்டளைக்கு நிலம், நீர், ஆகாயம், வெப்பம், காற்று எல்லாம் கட்டுப்பட்டுச்சு. மழை அளவா பேஞ்சுது. காற்று மிதமா வீசிச்சு. நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்துச்சு. வெப்பம் அளவோடு இருந்துச்சு. பயிர்கள் அமோகமா விளைஞ்சிருப்பதைப் பாத்து அவனுக்குப் பெருமிதம் பிடிபடலை. கடவுளைக் கூப்பிட்டு, பாத்தீங்களா ஆண்டவனே. நான் எப்பிடி விளைச்சலைப் பெருக்கி இருக்கேன்ன்னு சொன்னான். கடவுளும் சரி.. அறுவடை செய் என்று அருகில் நின்று வேடிக்கை பார்த்தார். 

விவசாயி அறுவடை செய்து முற்றிய கதிர்களை உதிர்த்துப் பார்த்தான். நெல் சிதறியது. ஆனால் உள்ளே அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தன. அவன் திகைத்துப் போயி இறைவனை ஏறிட்டுப் பார்த்தான். கடவுள் அமைதியாகச் சொன்னார்... இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். 

நான் புயலைக் கொடுக்கும் போது பயிர் தன் வேரை பலப்படுத்திக்கும். நான் வரட்சியைக் கொடுக்கும் போது பயிர் தன் வேர்களை நன்றாக பரவ விட்டு நீரைத் தேடி வளரும். நான் நீரை அதிகமாகக் கொடுக்கும் போது அதில் வேர்கள் அழுகிப் போகாமல் தன் வேர்க்கால்களை வலுவாக்கிக் கொள்ளும். அதனால் அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கு எற்றபடி மாறி, நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும்... ஆனால் நீ வளர்த்த பயிர்கள், சகல வசதியும் சுகமாய் கிடைத்ததும்... சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறி விட்டது. 

இது விவசாயிக்கு மட்டுமில்லை. நம் குடும்பத்துக்கும் பொருந்தும். பிள்ளைகளுக்குக் குடும்பக் கஷ்டம் தெரியாமல் சுகமாக வளர்த்தால் அவர்களால் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் எந்தவிதப் பலனும் இருக்காது. ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்து வளர்ந்த பிள்ளைகளே எதிர்காலத்தில் ஏற்றமிகு பலனைத் தருவார்கள்.

பயிர் நல்லா வளரனும்னு வரம் கேட்காம, என்கிட்ட இயற்கைய கன்ட்ரோல் பண்ற வரமா கேட்கற? உன்ன வெச்சி செய்றேன்டா - கடவுளோட மைன்ட்  வாய்ஸ்...

குட்டி கதை - பணம் 2

ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான். அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை   சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான். 

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டி இருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார். கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்.

மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர். 

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார். டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.

டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்க வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.

காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர். கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது, இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.

ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார். சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார். தான் கொடுத்த 500 ரூபாய்   ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை. 

வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி வந்ததில்  நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம். 

முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது. அது போலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அது போலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது. 

ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா? அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா? ஆகையால் பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே. *நட்பு, உறவு இதற்கு மதிப்பளிப்போம்*

இந்த 500 ரூபா போலீஸுக்கு போயிருந்தா மாப்ள ஜெயிலுக்கு போயிருப்பாரு...

குட்டி கதை - பணம்

ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை  சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த  500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான். 

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டி இருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார். கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்.

மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர். 

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார். டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.

டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்க வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.

காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர். கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது, இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.

ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார். சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார். தான் கொடுத்த 500 ரூபாய்   நோட் தான் அது என்பதை உறுதி செய்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை. 

 இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி வந்ததில்  நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம். 

முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் - பால் வாங்கிய பாக்கி  - கணக்கு நேராகிவிட்டது. அது போலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் - மனைவியின் பிரசவ பாக்கி - நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் - பிள்ளைகளுக்கு துணி தைத்தது - நேராகிவிட்டது. அது போலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் - மகள் சடங்கு செலவு - நேராகிவிட்டது. 

இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜம். ஒரே ஒரு 500 ரூபாய் இவ்வளவு கடனை நேர் செய்திருக்கிறதே ! நிறைய பணமிருந்தால்? நட்பு, உறவு இதெல்லாம் வேஸ்ட், பணமே பிரதானம் 😃

குட்டி கதை - தன்னம்பிக்கை

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி *யாருக்கு இது பிடிக்கும்?* எனக் கேட்டார்.  கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.  பேச்சாளார் உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன் எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து *இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?* என்றார்கள். 

அனைவரும் கையைத் தூக்கினர்.  அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.  அவர் தொடர்ந்தார் கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . *நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நாம் என்றும் தனித்துவமான வர்கள்.*  

நீதி:

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித் தன்மை இருக்கும். அதன் மதிப்பு என்றைக்கும் குறை வதில்லை.  ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்கள்.