Sunday, September 12, 2021

குட்டி கதை - ஊக்கம்

ஒரு விவசாயி ஒரு குதிரையையும், ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தான். அந்தக் குதிரையும் ஆடும் சிறந்த நண்பர்களாக இருந்தன.

ஒரு நாள் அந்தக் குதிரை வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அந்த விவசாயி குதிரைக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவரை அழைத்து வந்தான்.., மருத்துவர் அந்த குதிரையின் நிலையை பார்த்து, *நான் மூன்று நாட்கள் வந்து மருந்து தருகிறேன்* அந்த மருந்தைக் குதிரைக்குச் சாப்பிடக் கொடுங்கள். அதைச் சாப்பிட்ட குதிரை எழுந்து நடந்தால் சரி, இல்லையெனில் அதனைக் கொன்றுவிட வேண்டியது தான் என்று சொல்லியபடி குதிரைக்கான மருந்தைக் கொடுத்துச் சென்றார்.

இவர்களது உரையாடலை அந்த ஆடு கேட்டுக் கொண்டிருந்தது. விவசாயியும் அந்தக் குதிரைக்கு மருத்துவர் கொடுத்த மருந்தைக் கொடுத்தான். மறுநாள் வந்த மருத்துவர், குதிரையைப் பார்த்து விட்டு, அன்றைய மருந்தைக் கொடுத்துச் சென்றார். அந்த மருந்தையும் குதிரைக்குக் கொடுத்தான், அந்த விவசாயி. பின்பு சிறிது நேரம் கழித்து, அங்கு வந்த ஆடு, அந்தக் குதிரையிடம், நண்பா, நீ எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்கா விட்டால் அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று அந்த குதிரையை ஊக்குவித்தது. மூன்றாம் நாளும் மருத்துவரும் வந்தார். அவர் குதிரைக்கு மருந்து கொடுத்து விட்டு, அந்த விவசாயிடம் நாளை குதிரை நடக்கவில்லை என்றால், அதனைக் கொன்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த வைரஸ் பரவி, மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்று சொல்லிச் சென்றார். இதைக் கேட்ட ஆடு, அந்த மருத்துவர் சென்றதும், குதிரையிடம் வந்து, நண்பா! எப்படியாவது எழுந்து நடக்க முயற்சி செய். நீ நடக்க முடியாமல் போனால் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று சொல்லியது. அந்தக் குதிரையும் முயற்சி செய்து மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கியது. தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த விவசாயி அசந்து போகும் படியாக குதிரை ஓடியது. மறுநாள் அந்த விவசாயி மருத்துவரை அழைத்து வந்து குதிரையைக் காண்பித்தான்.

அவன் மருத்துவரிடம், என் குதிரை நன்றாகக் குணமடைந்து விட்டது. அது நன்றாக ஓடத் தொடங்கி விட்டது. இதற்கு நீங்கள் கொடுத்த மருந்துதான் காரணம். என் குதிரையைப் பிழைக்க வைத்த உங்களுக்கு நல்ல விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். இந்த ஆட்டை வெட்டிப் பிரியாணி செய்து கொண்டாடி விடுவோம் என்றான். குதிரை ஆட்டின் *ஊக்கத்தால்* எழுந்து நடந்தாலும் மருத்துவர் கொடுத்த மருந்தால்தான் குதிரை குணமடைந்ததாகத்தான் விவசாயி நினைத்தான்...!!!

*நீதி:-*

இப்படித்தான் *இந்த உலகில் யாரால் நன்மை கிடைத்தது* என்பதை உணராமல், பலரும் உண்மையைப் *பலி கொடுத்துக்* கொண்டிருக்கிறார்கள்.


Thursday, September 9, 2021

குட்டி கதை - மனித நேயம்

போகும் வழியில் ஒரு மின்கம்பத்தில் ஒரு சிறு துண்டு காகிதம் எழுதி தொங்க விட பட்டிருந்தது. அப்படி என்னதான் அதில் எழுதியிருக்கு என்ற ஆர்வத்தில் நானும் போய் படித்தேன்.

அதில் என்னுடைய 50 ரூபாய் தொலைந்து விட்டது. யார் கையிலாவது கிடைத்தால் தயவு செய்து இந்த விலாசத்தில் தருமாறு கேட்டு கொள்கிறேன். எனக்கு கண் பார்வை அவ்வளவு சரியில்லை என்று விலாசத்துடன் எழுதியிருந்தது.

எனக்கும் பொழுது போகவில்லை, அந்த குறுக்கு வழியில் பார்த்த ஒரு நபரிடம் விலாசம் கூறி வழி கேட்டேன். இந்த அம்மாவா, கொஞ்சம் தூரம் போனால் ஓர் பழைய வீடு இருக்கும். அங்க தான் அந்த கண் தெரியாத அம்மா இருக்கு.

அங்கே ஓர் சிறிய கீத்து கொட்டகை. ஒரு நாள் மழைக்கு கூட தாங்காது. வெளியில், கண்கள் குழி விழுந்து, எலும்பும் தோலுமாக வயதான ஓர் அம்மா . என் காலடி சத்தம் கேட்டதும், யாருப்பா நீ? அம்மா நான் இந்த வழியாக வந்தேன், எனக்கு 50 ரூபா கீழே விழுந்து கிடைத்தது. அது உங்களிடம் தரலாம் என்று வந்தேன். கேட்டதும் அந்த அம்மா அழ ஆரம்பித்து விட்டார்.

தம்பி ரெண்டு நாளா கிட்டத்தட்ட முப்பது முப்பத்தஞ்சு பேர் வந்து 50 ரூபா கீழே விழுந்து கிடைச்சது என்று சொல்லி குடுத்துட்டு போறாங்க... அந்த கடிதம் நான் எழுதவில்லை. எனக்கு எழுத படிக்க தெரியாது. பரவாயில்ல அம்மா நீங்க வச்சிக்கிங்க என்று சொல்லி கொடுத்து திரும்பினேன். தம்பி நீ போகும் போது மின்கம்பத்தில் இருக்கும் அந்த கடிதத்தே மறக்காமல் கிழித்து போட்டு விடு என்று அறிவுரைத்தாள் அந்த தாய்.

என் மனதில் வித விதமான எண்ணங்கள். யார் அந்த கடிதத்தை எழுதி இருப்பார். அந்த கடிதத்தை கிழித்து விடு என்று அந்த அம்மா ஒவ்வொருவரிடமும் கூறி கொண்டு தான் இருப்பார். ஆனால் யாரும் அப்படி செய்யவில்லை. யாரும் இல்லாமல் அனாதையாக வாழும் ஓர் உயிருக்கு கடித வடிவில் உதவி செய்த அந்த நண்பருக்கு மனத்தால் நன்றி சொல்லி கொண்டேன். நன்மை செய்யவேண்டும் என்ற மனம் இருந்தால் அதற்க்கு ஆயிரம் வழி.

மனதில் யோசித்து கொண்டே வரும்போது வழியில் ஒருவர் என்னிடம். அண்ணே இந்த விலாசம் எங்கே என்று சொல்ல முடியுமா? கீழே இருந்து 50 ரூபாய் கிடைத்தது. அந்த அம்மா கிட்டே குடுக்கணும். வழி சொல்றீங்களா?

*மனித நேயம் சாகவில்லை....*

ஹி ஹி...அந்த கடிதத்தை நான் தான் ஏழுதி வெச்சேன்....

Monday, September 6, 2021

குட்டி கதை - நீதி

ஒரு புலி வேடனைத் துரத்திக் கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று, இவ்வேடன் நமது மிருக குலத்துக்கே பகைவன், இவனைக் கீழே தள்ளி விடு! 

இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று, எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது, இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற கூறிய உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது, எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. *சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்...*

எலி வலையானாலும் தனி வலை

ஆளவந்தார் அந்த ஊரில் முக்கியப் புள்ளி. தன் மனைவி மற்றும் 3மகன்களுடன் செல்வ செழிப்போடு வாழ்ந்து வந்தார்.

மூன்று மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்த அவர், தன் சொத்தை நான்கு பங்காக சமமாக பிரித்து ஆளுக்கு ஒரு பங்கைப் பிரித்து அவர்களுக்குத் தந்தார். தன் தேவைக்காக ஒரு முடிவு செய்தார்.

சொத்தில் ஒரு பங்கை தன் கூடவே வைத்துக் கொண்டார்.

சில ஆண்டுகள் சென்றன. அவரது மனைவியும் அவரை விட்டு மறைந்து போக தனித்து விடப்பட்டார்.

ஒரே ஒரு நம்பிக்கையான உதவியாளர் மற்றும் சில வேலைக்காரர்கள். இவர்களே அவர்களுக்கு இப்போது துணையாக இருந்தனர்.

இதுவே அவர் வாழ்க்கை நிலை தற்போது.

தந்தை தனியாகத் துன்பப்படுவதை பார்த்து அவர் மூன்று மகன்களால் தாங்க முடியவில்லை.

ஒரு நாள் அவர்கள் மூவரும் கூடிப் பேசி அவரிடம் வந்தார்கள்.

அப்பா, நீங்கள் ஏன் தனியாக இந்த வீட்டில் கஷ்டப்பட வேண்டும்? உங்களுக்கு என்று இருக்கும் சொத்தையும் எங்களுக்கு சமமாக பிரித்துத் தந்து விடுங்கள்.

எங்களில் யார் வீட்டில் வேண்டுமானாலும் உங்கள் விருப்பம் போல தங்கியிருங்கள்.

உங்களுக்கு எந்த குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று பாசத்துடன் அழைத்தார்கள்.

ஆளவந்தார் நினைத்தார். மகன்களுடன் தங்குவது நல்லது என்று அவருக்கும் பட்டது. இருந்தாலும் சிந்தித்து முடிவு செய்வோமே.?
என்று அவர் மனதுக்குள் திடீரென தோன்றியது.

ரொம்ப சந்தோஷம். ஒரு 3 மாதம் கழித்து வாருங்கள் நான் என் எண்ணத்தை அப்போது சொல்கிறேன் உங்களிடம் என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

பிள்ளைகளை தந்தை காப்பாற்றுவது போல தந்தையை பிள்ளைகள் காப்பாற்றுவார்களா.? என்று அன்றுமுதல் ஒரே சிந்தனை அவருக்கு.

தன் உதவியாளரை அழைத்த ஆளவந்தார், நம் வீட்டுத் தோட்டத்தில் குருவி ஒன்று புதிதாக கூடு கட்டியுள்ளது. அதில் சில குருவிக் குஞ்சுகள் உள்ளது போலத் தெரிகிறது.

தாய் குருவியை இல்லாத சமயம் அதன் குஞ்சுகளை மட்டும் அந்த மரத்தில் ஏறி அந்தக் கூண்டோடு பத்திரமாக எடுத்து வா என்று பணித்தார்.

உதவியாளரும் அவர் சொன்னது போலவே அந்தக் குருவி கட்டிய கூடோடு குருவிக் குஞ்சுகளை கொண்டு வந்தார்.

அந்த குருவிக் குஞ்சுகளை தகுந்த பாதுகாப்போடு வைத்தார் ஆளவந்தார்.

அந்த குஞ்சுகள் வெளியே வர முடியாதபடி சின்ன தடுப்பு அமைத்து அந்தக் கூண்டை தன் படுக்கையறை ஜன்னல் அருகே தொங்க விட்டார்.

தாய்க்குருவி அந்தக் கூண்டை கண்டு பிடித்து அருகே வந்தது. கூவியபடியே அதை சுற்றிச் சுற்றிப் பறந்தது.

தன் குஞ்சுகள் அங்கிருந்து வெளியே வர முடியாது என்பதை அறிந்தது.

இருந்தாலும் அந்தக் குருவி வெளியே பறந்து சென்று வேளா வேலைக்குத் தவறாமல் தன் குஞ்சுகளுக்கு உணவைக் கொண்டு வந்து ஊட்டியது.

சிறிது காலம் சென்ற பின் குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்தது.

கூண்டிற்கு உள்ளேயே பறக்கத் தொடங்கின அவைகள்.

இப்போது ஆளவந்தார் வேறு ஒரு வேலை செய்தார். தன் தோட்டக்காரனை வைத்து அந்த தாய்க் குருவியை பிடித்து வெளிவர முடியாத ஒரு கூண்டில் அடைத்து அந்தக் கூண்டை எடுத்து வரப் பணித்தார்.

அந்த குஞ்சுக் குருவிகள் இருக்கும் அதே கூண்டிற்கு அருகிலேயே அந்தக் கூண்டை தொங்க விட்டார்.

இப்போது அவர் அந்த குஞ்சுகள் இருக்கும் கூண்டைத் திறந்து விட்டார்.

அதில் இருந்த எல்லா குஞ்சுகளும் வெளியே உற்சாகமாக பறந்து சென்றன.

அந்தக் குஞ்சுகள் பறப்பதைக் கண்ட தாய்க் குருவிக்கு ஆனந்தம்.

தன் மகிழ்ச்சியை அது உரத்த குரலில் வெளிப்படுத்தியது.

வெளியே பறந்து சென்ற அதன் குஞ்சுகள் அங்கு வரும், தாய்க்குருவியை பார்க்கும், அதற்கு உணவு கொண்டு வரும் என்று எதிர்பார்த்தார் ஆளவந்தார்.

ஆனால் அதன் குஞ்சுகள் எதுவுமே அந்த தாய்க் குருவி இருக்கும் கூண்டு பக்கமே வரவில்லை.

பொறுத்துப் பார்த்து விட்டு அந்த தாய்க்குருவிக்கு பல தானியங்களையும் அளித்து. பிறகு அந்த கூண்டைத் திறந்து விட்டார்.

ஆனால் என்ன ஒரு ஆச்சரியம், எங்கு வெளியே சென்றாலும் அந்த தாய்க் குருவி திரும்பவும் அந்தக் கூண்டிற்கே வந்தது. 

ஆளவந்தாரிடம் நல்ல தோழமையையும் பாராட்ட ஆரம்பித்தது.

ஆளவந்தார் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் இப்போது.

அவர் கூறியது போலவே மூன்று மாதங்கள் கழித்து அவரது மூன்று மகன்களும் வந்தார்கள். 

அப்பா எங்களுடன் தங்குவதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள் முஸ்தீபாக.

ஆளவந்தார் மூன்று மகன்களையும் வரவேற்றார்.

அவர்கள் மனது நோகாமல் விதமாக பின்வருமாறு சொன்னார்,

என்னை இப்படியே விடுங்கள். உங்கள் அம்மா வாழ்ந்த இந்த வீட்டில் வாழ்ந்து எனக்கு பழக்கமாகி விட்டது.
எனவே நான் இங்கே தனிமையாகவே வாழ ஆசைப்படுகிறேன்.

எனக்கு பிறகு என் பங்கான இந்த சொத்தையும் நான்காக பிரிக்க உத்தேசித்துள்ளேன்.

3 பகுதிகள் உங்கள் மூவருக்கும் மற்றும் ஒரு பகுதி என் உதவியாளார் மற்றும் இந்த வீட்டு வேலைக்காரர்களுக்கு என்று உயில் எழுத உத்தேசித்துள்ளேன்.

அடிக்கடி உங்கள் குடும்ப சகிதமாக என்னை வந்து பார்த்துக்கொள்ளுங்கள்.
என் உடல்தான் இங்கே. உயிர் என்றும் உங்களோடு என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

இப்போது அவர் மனம் தெளிவாக இருந்தது. 

அந்த தாய்க் குருவி அவர் தோளில் எங்கிருந்தோ பறந்து வந்து அமர்ந்தது. நீங்கள் உங்கள் மகன்களிடம் சொன்னது சரிதான் என்று அது சொல்வது போல ஆளவந்தாருக்குத் தோன்றியது.

நீதி: "எலி வலையானாலும் தனி வலையாக இருப்பது" நன்று.

*நம் பிள்ளைகள் நம்மை கடைசிவரை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள், என்ற நம்பிக்கை இருந்த போதிலும். நாம் ஓய்வு எடுத்துக் கொள்ளும் காலம், நமக்கென்று சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு தனியாக இருப்பது நலம் யாருக்கும் பாரமாக இருக்காமல்?*

இந்த நாள் இனிய நாள் ஆக அமைய வாழ்த்துகள் நண்பர்களே🙏