Friday, May 4, 2018

சாய் சத்சரிதம் அத்தியாயம் 12

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 12
சாயி லீலைகள்
1. காகா மகாஜனி
2. வக்கீல் துமால்
3. திருமதி நிமோண்கர்
4. முலே சாஸ்திரி
5. ஒரு டாக்டர்
ஆகியோரின் அனுபவங்கள்

இந்த அத்தியாயத்தில் பக்தர்கள் பாபாவினால் எவ்வாறு வரவேற்கப்பட்டு நடத்தப்பட்டார்கள் என்பதைக் காண்போம்.

நல்லோரைக் காத்துக் கொடியோரை அழிப்பதே தெய்வ அவதாரத்தின் நோக்கம் அல்லது குறிக்கோள் என்பதை முன்னரே கண்டோம். ஞானிகளின் இறையருட்கட்டளைப் பணியோ முற்றிலும் மாறுபாடானது. அவர்கட்கு நல்லோரும், கொடியோரும் ஒன்றே. தீது செய்பவர்க்காக வருந்தி அவர்களை நெறிப்படுத்துகிறார்கள். அவர்கள் பவசாகரத்தைக் (இவ்வுலக வாழ்வெனும் பெருங்கடலை) குடிக்கும் அகஸ்தியர் அல்லது அறியாமை இருளை ஒழிக்கும் ஆதவன் ஆவார்கள். ஞானிகளிடம் கடவுள் வசிக்கிறார். உண்மையில், அவரிடமிருந்து அவர்கள் வேறானவர்கள் அல்லர். பக்தர்கள் நன்மைக்காக அவதரிக்கும் இத்தகையவர்களுள் ஒருவரே நமது சாயி ஆவார்.

ஞானத்தின் உச்சக்கட்டத்தில் தெய்வீக ஒழி சூழப்பட்டு எல்லா ஜந்துக்களையும் சமமாக நேசித்திருந்தார். அவர் பற்றற்றவர். பகைவர்களும், நண்பர்களும், அரசனும், ஆண்டியும் அவருக்கு ஒன்றே. அவருடைய அசாதாரணத் திறமையைச் செவிமடுங்கள். அடியவர்களுக்காகத் தமது தகைமைக் களஞ்சியத்தைச் செலவிட்டார். அவர்களுக்கு உதவி செய்வதில் எப்போதும் விழிப்பாய் இருந்தார். ஆனால் அவராக அடியவர்களை வரவேற்க எண்ணினாலொழிய ஒருவரும் அவரை அணுக இயலாது. அவர்களது முறை வரவில்லையானால் பாபா அவர்களை நினைப்பதில்லை. அவருடைய லீலைகளும் அவர்களின் காதை எட்டவியலாது. பிறகு அவர்கள் எங்ஙனம் அவரைப் பார்க்க எண்ணமுடியும்?

சிலர் சாயிபாபாவைப் பார்க்க விரும்பினர். ஆயினும் அவரின் மஹாசமாதிவரை அவரின் தரிசனத்தைப்பெற அவர்களுக்கு வாய்ப்பேதும் கிடைக்கவில்லை. பாபாவின் தரிசனத்தைப்பெற விரும்பிய பலரின் விருப்பமானது இங்ஙனம் நிறைவேறாமல் போயிற்று. அவர்மீது நம்பிக்கை கொண்ட இத்தகையோர் அவரது லீலைகளைச் செவிமடுப்பாராயின் பாலுக்கான (தரிசனத்திற்கான) அவர்களது ஏக்கமானது வெண்ணெயினால் (லீலைகளால்) பெருமளவு திருப்திப்படுத்தப்படும்.

வெறும் அதிஷ்டத்தினாலேயே ஷீர்டி சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்ற சிலர், நீண்ட நாட்கள் அங்கு தங்க இயலுமா? இயலாது. ஒருவரும் தாமாகவே ஷீர்டி செல்லமுடியாது. தாம் நினைத்தபடி அங்கு நீண்டநாட்கள் இருக்கமுடியாது. பின்னர், அவர்களுக்கு அனுமதி கொடுத்த நாட்கள் வரைக்குமே அவர்கள் தங்கவேண்டும். பாபா அவர்கள் அவ்விடத்தை விட்டுப் போகும்படி கேட்டதும் அவ்விடத்தைவிட்டுப் போய்விடவேண்டும். எனவே அனைத்தும் பாபாவின் சங்கல்பத்தையே சார்ந்து இருந்தன.

காகா மகாஜனி
ஒருமுறை காகா மகாஜனி ஷீர்டிக்கு பம்பாயிலிருந்து சென்றார். அவர் அங்கு ஒருவாரம் தங்கி கோகுலாஷ்டமி பண்டிகையைக் கண்டு மகிழ விரும்பினார். பாபாவின் தரிசனத்தைப் பெற்றவுடனே, பாபா அவரை, "எப்போது வீட்டிற்குத் திரும்பப்போகிறாய்?" எனக் கேட்டார். அவர் இத்தகைய வினாவினால் ஆச்சரியமே அடைந்தாரெனினும் பதில் அளிக்கவேண்டும் என்பதற்காக, பாபா தம்மை அங்ஙனம் செய்ய எப்போது ஆணையிடுகிறாரோ அப்போதே தாம் வீட்டிற்குப் போகப் போவதாகக் கூறினார். பாபா, "நாளைக்குப் போ!" எனக் கூறினார்.

பாபாவின் மொழிகளே சட்டமானதால், அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எனவே உடனே காகா மஹாஜனி ஷீர்டியை விட்டுப் புறப்பட்டார். பம்பாயில் தனது அலுவலகத்திற்குச் சென்றபின்னர், தனது எஜமானர் தன்னுடைய வரவுக்காகக் கவலையுடன் காத்திருப்பதை அறிந்தார். எனவே காகாவின் வரவு அவருக்குத் தேவைப்பட்டது. ஷீர்டியில் காகாவுக்கு ஓர் கடிதம் அனுப்பியிருந்தார். பம்பாய்க்கு அது திருப்பி அனுப்பப்பட்டது.

வக்கீல் பாவ் சாஹேப் துமால்

இப்போது மாறுபாடான ஒரு கதையைக் கேளுங்கள். ஒருமுறை பாவ் சாஹேப் துமால் ஒரு விசாரணைக்காக நிபாட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். வழியில் ஷீர்டிக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெற்று உடனே நிபாட்டிற்குச் செல்ல விரும்பினார். ஆனால் பாபா அவரை அங்ஙனம் செய்ய அனுமதிக்கவில்லை. ஒரு வாரமோ, அல்லது அதற்கு மேலோ அவரை ஷீர்டியில் தங்கவைத்தார். இதே நேரத்தில் நிபாட்டில் உள்ள நியாயாதிபதி அடிவயிற்றில் ஏற்பட்ட வலியினால் மிகவும் துன்புற்றார். எனவே, விசாரணை ஒத்திப்போடப்பட்டது. துமால் அங்கு சென்றபின்னரே விசாரணை தொடர்ந்தது. முடிவில் துமால் வெற்றி பெற்றார். அவரது கட்சிக்காரர் குற்றமற்றவராகத் தீர்ப்பளிக்கபட்டார்.

திருமதி நிமோண்கர்
நிமோணின் வாடண்டர் (சேவையாகச் செய்யும் கௌரவபதவி - Honorary Magistrate) நானா சாஹேப் நிமோண்கர், தமது மனைவியுடன் ஷீர்டியில் தங்கியிருந்தார். நிமோண்கரும் அவரது மனைவியும் மசூதியில் பாபாவுடன் பெரும்பாலான நேரத்தைக் கழித்து அவருக்குச் சேவை செய்துவந்தனர். பெலாபூரில் அவர்களது மகன் நோய்வாய்ப்பட்டான். பாபாவின் சம்மதத்துடன், பெலாபூர் சென்று மகனையும், மற்ற உறவினர்களையும் கண்டு அங்கு சில நாட்கள் தங்கிவரலாம் என்று அன்னை தீர்மானித்தாள்.

ஆனால் நானா சாஹேப் அடுத்த நாளே அவளைத் திரும்பி வரும்படி கூறினார். அன்னைக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. ஆனால் அவளுடைய இறைவன் சாயி அவளுக்கு உதவிட வந்தார். ஷீர்டியை விட்டுப் புறப்படும்போது, அவள் சாதேவின் வாதாவுக்கு முன்னால் நானா சஹேப்புடனும் மற்றவர்களுடனும் நின்றுகொண்டிருந்த பாபாவின் முன்சென்று சாஷ்டாங்கமாய் விழுந்து புறப்படுவதற்கு அனுமதி கேட்டாள். பாபா அவளிடம், "போ, சீக்கிரம் போ, அமைதியாகவும், குழப்பமடையாமலும் இரு. நான்கு நாட்களுக்கு பெலாபூரில் சௌகரியமாக இரு. உனது உறவினர்களை எல்லாம் கண்டபின் ஷீர்டிக்குத் திரும்பு" என்று உரைத்தார். பாபாவின் மொழிகள் எத்தகைய அதிஷ்டம் படைத்தது. நானா சாஹேபின் தீர்மானம் பாபாவின் தீர்ப்பினால் தோற்கடிக்கப்பட்டது.

நாசிக் முலே சாஸ்திரி

ஜோசியம், கைரேகை முதலியவற்றில் கரைகண்டவரும், ஆறு சாஸ்திரங்களைக் கற்றறிந்தவருமாகிய நாசிக்கைச் சேர்ந்த வைதீகமான அக்னிஹோத்ரி அந்தணர் முலே சாஸ்திரி ஒருமுறை நாக்பூரின் புகழ்பெற்ற கோடீஸ்வரரான பாபு சாஹேப் பூட்டியைச் சந்திக்க ஷீர்டிக்கு வந்தார். அவரைச் சந்தித்தபின்னர், அவரும் மற்றவர்களும் பாபாவைக் காண மசூதிக்குச் சென்றனர். பாபா தம்முடைய சொந்தப் பணத்திலேயே வெவ்வேறு பழங்களையும், மற்றப் பொருட்களையும் விற்பனையாளரிடமிருந்து வாங்கி மசூதியிலுள்ள மக்களுக்கு விநியோகித்தார்.

பாபா மாம்பழத்தை அதன் எல்லாப் பக்கங்களிலும் மிகத் திறமையாக அழுத்துவது வழக்கம். ஒருவன் பாபாவிடமிருந்து அதை வாங்கி உறிஞ்சுவானேயாகில், எல்லா சதைப்பற்றையும் உடனே தன வாயில் உறிஞ்சிக்கொண்டு கொட்டையையும், தோலையும் உடனே தூக்கி எறிந்துவிட முடியும். வாழைப் பழங்களை உரித்து சதைப்பற்றை அடியவர்க்கு விநியோகித்து, தோலை பாபா தமக்காக வைத்துக்கொள்வார். கைரேகை சாஸ்திரி என்ற முறையில் முலே சாஸ்திரி, பாபாவின் கையைப் பரிசோதிக்க விரும்பினார். பாவிடம் கையைக் காண்பிக்கக் கோரினர். பாபா அவருடைய வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை. அவருக்கு நான்கு வாழைப்பழங்களைக் கொடுத்தார். எல்லோரும் வாதாவுக்குத் திரும்பினர்.

முலே சாஸ்திரி குளித்துப் புனித ஆடைகள் அணிந்து அக்னிஹோத்ரம் போன்ற தன நித்ய கர்மானுஷ்டங்களைச் செய்ய ஆரம்பித்தார். பாபா வழக்கம்போல் லெண்டியை நோக்கிப் புறப்பட்டார். "கொஞ்சம் ஜெரு எடு, (குங்குமப்பூ நிறத்தில் துணியைச் சாயம் போடுவதற்கான சிவப்பு மண்ணைப்போன்ற ஒரு பொருள்) நாம் இன்று குங்குமப்பூ நிற உடை உடுத்தலாம்" என்று பாபா கூறினார். பாபா என்ன சொல்கிறார் என்று ஒருவருக்கும் விளங்கவில்லை. சிறிது நேரம் கழித்து, பாபா திரும்பி வந்தார். மத்தியான ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

பாபு சாஹேப் ஜோக், முலே சாஸ்திரியிடம் அவர் தன்னுடன் ஆரத்திக்கு வருகிறாரா என்று கேட்டார். மாலையில் தாம் பாபாவைப் பார்க்கப்போவதாக அவர் பதிலளித்தார். இதற்குச் சிறிது நேரத்திற்குப்பின் பாபா தமது ஆசனத்தில் அமர்ந்தார். அடியவர்களால் வழிபடப்பட்டார். ஆரத்தியும் துவங்கியது. பிறகு பாபா "புது பிராமணனிடமிருந்து தட்ஷனை வாங்கி வா" எனக் கூறினார். பூட்டி தாமே தட்ஷனை வாங்கச் சென்றார். பாபாவின் செய்தியை முலே சாஸ்திரியிடம் தெரிவித்தபோது அவர் சொல்லப்பெறாத அளவு குழப்பம் அடைந்தார். "நான் தூய அக்னிஹோத்ரி பிராமணன். நான் ஏன் தட்ஷனை கொடுக்கவேண்டும்? பாபா பெரிய முனிவராக இருக்கலாம். நான் அவரது சீடனல்ல!" என நினைத்தார். ஆனால் சாயிபாபாவைப் போன்ற ஞானி, பூட்டியைப் போன்ற கோடீஸ்வரரிடம் தட்ஷனை கேட்டனுப்பியிருப்பதனால் அவரால் மறுக்க இயலவில்லை. எனவே தனது அனுஷ்டானத்தைப் பூர்த்தியாக்காமல் உடனே பூட்டியுடன் மசூதியை நோக்கிச் சென்றார்.

தம்மைத் தூயவராகவும், புனிதமானவராகவும், மசூதியை வேறுவிதமாகவும் கருதிய அவர் சற்று தூரத்தில் இருந்தே கைகளைச் சேர்த்து பாபாவின்மீது புஷ்பங்களை வீசினார். அப்போது ஆஹா! திடீரென்று ஆசனத்தில் அவர் பாபாவைக் காணவில்லை. காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமியையே அங்கு கண்டார். ஆச்சரியத்தால் அவர் செயலிழந்தார். இது கனவாயிருக்குமோ? அல்ல, அங்ஙனமன்று! அவர் அகல விழித்திருந்தார். காலஞ்சென்ற தனது குரு கோலப் ஸ்வாமி எங்ஙனம் அங்கு இருக்கமுடியும்? சிறிதுநேரம் அவர் பேச்சற்றுவிட்டார். தன்னையே கிள்ளிவிட்டுக்கொண்டார். திரும்பவும் நினைத்தார். ஆனால் காலஞ்சென்ற தனது குரு மசூதியில் இருக்கும் உண்மையை அவரால் ஏற்கமுடியவில்லை. முடிவில் எல்லா ஐயங்களையும் களைந்துவிட்டுத் தெளிந்தநிலையில் தனது குருவின் அடிகளில் பணிந்து, கூப்பிய கரங்களுடன் நின்றிருந்தார்.

மற்ற எல்லோரும் ஆரத்தி பாடுகையில் முலே சாஸ்திரி தனது குருவின் பெயரை இரைந்து கூக்குரலிட்டார். இனப்பெருமை, புனிதத்தன்மை பற்றிய எண்ணங்களை ஒதுக்கி எறிந்துவிட்டு தனது குருவின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து கண்களை மூடிக்கொண்டார். எழுந்திருந்தபோது பாபா தட்ஷணை கேட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார். பாபாவின் பேரானந்த ரூபத்தையும் சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவரின் சக்தியையும் கண்டு முலே சாஸ்திரி தன்னையே மறந்தார். எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார். திரும்பவும் பாபாவை வணங்கி தட்ஷணை கொடுத்தார். தனது சந்தேகம் நீங்கிவிட்டதாகவும், தன் குருவையே கண்டதாகவும் அவர் கூறினார்.

பாபாவின் இந்த லீலையைக் கண்ணுற்ற அனைவரும், முலே சாஸ்திரி உட்பட, மிகவும் மனதுருகிப்போயினர். "ஜெரு எடு, நாம் இன்று குங்குமப்பூ வண்ண உடை உடுத்தலாம்" என்ற பாபாவின் பொன்மொழிகளை இப்போது புரிந்துகொண்டனர். சாயிபாபாவின் லீலை அத்தகைய அற்புதம் வாய்ந்ததாகும்.

ஒரு டாக்டர்
ஒருமுறை ஒரு மம்லதார் தனது டாக்டர் நண்பருடன் ஷீர்டிக்கு வந்தார். தனது தெய்வம் ராமர் என்றும், தான் ஒரு முஹமதியர் முன் பணியப் போவதில்லை என்றும் கூறி, ஷீர்டிக்கு வர விருப்பமில்லாதவராய் இருந்தார். மம்லதார் அவரிடம், அவரைப் பணியும்படி ஒருவரும் கேட்கவோ, வற்புறுத்தவோ மாட்டார்கள் என பதில் உரைத்தார். எனவே தோழமைக் கூட்டின் மகிழ்ச்சியை நல்குதற்காக அவரும் உடன் வருதல் வேண்டும். அவ்வாறாக அவர்கள் ஷீர்டிக்கு வந்து பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர். டாக்டர் முன்னால் சென்று வணங்குவதைக் கண்ணுற்ற அனைவரும் ஆச்சரியத்தால் செயலிழந்தனர்.

அவர் எங்ஙனம் தனது தீர்மானத்தை மறந்து முஹமதியர் முன் பணிந்தார் என்று அனைவரும் அவரைக் கேட்டனர். தனது அன்பிற்குரிய தெய்வம் ராமரையே ஆசனத்தில் பார்த்ததாகவும், எனவே தாம் சாஷ்டாங்கமாக வணங்கியதாகவும் கூறினார். இதை அவர் சொல்லும்போதே சாயிபாபாவை மீண்டும் அங்கே கண்டார். திகிலுற்ற அவர், "இது கனவா? எங்ஙனம் அவர் முஹமதியராக இருக்கமுடியும்? அவர் ஒரு மாபெரும் யோகநிறை (யோகசம்பன்ன) அவதாரம் ஆவார்" என நினைத்தார்.

அடுத்தநாள், தான் உண்ணாமல் விரதம் இருப்பதென்று சபதம் எடுத்துக்கொண்டார். மசூதிக்குப் போவதைத் தவிர்த்து, பாபா தன்னை ஆசீர்வதிக்கும்வரை அங்கு போவதில்லை எனத் தீர்மானம் செய்துகொண்டார். மூன்று நாட்கள் கடந்தன. நான்காவது நாள் கான்தேஷிலிருந்து அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வந்து சேர்ந்தார். அவருடன் பாபாவின் தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றார். வணக்கதிற்குப்பின் "ஓ! டாக்டரா, உம்மை இங்கு அழைத்துவர கான்தேஷிலிருந்து யார் வந்தது என்று எனக்கு முதலில் சொல்லும்?" என்று பாபா அவரைக் கேட்டார். இந்த முக்கியமான வினாவைக்கேட்டு டாக்டர் மனதுருகினார். அன்றிரவே அவர் பாபாவினால் ஆசீர்வதிக்கப்பட்டார். தூக்கத்தில் பேரானந்தப் பெருநிலையை (Bliss Supreme) அனுபவித்தார். இங்ஙனம் சாயிபாபாவிடம் அவரது பக்தி பன்மடங்காகப் பெருகியது.

வேறு எவ்விடத்திலும் இல்லாமல், நாம் நம்முடைய குருவினிடத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராய் இருக்கவேண்டும் என்பதே இந்தக் கதைகளின், முக்கியமாக முலே சாஸ்திரியின் கதையினுடைய நீதியாகும். அடுத்த அத்தியாயத்தில் இன்னும் அதிக லீலைகள் விவரிக்கப்படும்.

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

No comments:

Post a Comment