Friday, May 4, 2018

சாய் சத்சரிதம் அத்தியாயம் 35

ஸ்ரீ சாயி சத்சரிதம் - அத்தியாயம் 35
சோதிக்கப்பட்டுப் போதாக்குறை
ஏதுமில்லை எனக் கண்டுணர்தல்

காகா மஹாஜனியின் நண்பரும்,
எஜமானரும்

பாந்த்ராகாரரின் தூக்கமின்மை வியாதி

பாலாஜி பாடீல் நெவாஸ்கர்

இந்த அத்தியாயமும் உதியின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் செய்திகளைத் தொடர்கிறது. பாபா சோதிக்கப்பட்டுப் போதாக்குறை ஏதுமில்லை எனக் கண்டுணரப்பட்ட இரண்டு நிகழ்சிகளையும் அது உரைக்கிறது. இந்நிகழ்சிகளை முதலில் காண்போம்.

முன்னுரை

ஆன்மிக விஷயங்களில் அல்லது முயற்சிகளில் சமயப்பிரிவு உணர்ச்சி நமது முன்னேற்றத்துக்குப் பெருந்தடையாய் இருக்கிறது. கடவுள் உருவமற்றவர் என நம்புவோர்கள், "கடவுள் உருவமுள்ளவர் என நம்புவது மாயத் தோற்றமே. ஞானிகளும் மனிதர்களே" என்று கூறுவது நமது காதில் விழுகிறது. பின்னர் ஏன் அவர்கள் ஞானிகளின்முன் தலைவணங்கி தஷிணை கொடுக்கிறார்கள்? இதர சமயப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆட்சேபணைகள் எழுப்பி தங்களது சத்குருக்களை விட்டுவிட்டு, மற்ற ஞானிகள்முன் தலைவணங்கி ஏன் தங்கள் உறுதியான கடப்பாட்டினைச் செலுத்தவேண்டும்?" என்று கூறுகின்றனர். முன்னால் இதைப்போன்ற ஆட்சேபணைகள் சாயிபாபாவைப் பற்றியும் சொல்லப்பட்டன.

இப்போதும்கூட அவைகள் செவியில் விழுகின்றன. சிலர் தாங்கள் ஷீர்டிக்குச் சென்றபோது பாபா அவர்களிடம் தஷிணை கேட்டதாகவும், இம்முறையில் ஞானிகள் பணம் சேர்ப்பது நல்லதா என்றும் இம்மாதிரி அவர்கள் செயல் புரிவார்களாயின் அவர்கள் ஞானம் எல்லாம் எங்கே போயிற்று என்றும் வினவினர். ஆனால் இம்மாதிரி ஏளனம் உரைக்க ஷீர்டிக்குச் சென்றவர்களெல்லாம் அங்கு பிரார்த்தனைக்குத் தங்கிவிட்டனர். அத்தகைய இரண்டு விஷயங்கள் கீழே தரப்படுகின்றன.

காகா மகாஜனியின் நண்பர்

காகா மகாஜனியின் நண்பரொருவர் கடவுளை உருவமற்ற நிலையில் வழிபடுபவர். உருவ ஆராதனைக்கு எதிர்ப்பாளர். வேடிக்கையாக அவர் ஷீர்டிக்கு காகா மகாஜனியுடன் இரண்டு நிபந்தனைகளின் பேரில் வந்தார். அவையாவன தாம் பாபாஜியின்முன் பணியவோ, தஷிணை கேட்டால் கொடுக்கவோ இயலாது. காகா இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டார். அவ்விருவரும் ஒரு சனிக்கிழமை இரவு பம்பாயை விட்டுப் புறப்பட்டு ஷீர்டிக்கு அடுத்தநாள் சென்றனர்.

மசூதிப்படிகளில் அவர்கள் காலடி எடுத்து வைத்தவுடனேயே பாபா அந்த நண்பரைத் தூரத்திலேயே பார்த்துக் கீழ்கண்ட இனிமையான சொற்களால் அழைத்தார்: "காம் யாவேன் ஜி" (ஏன் வந்தீர் ஐயா!) இச்சொற்களை அவர் உதிர்த்த குரல் வெகுபுதிய விதமாக இருந்தது. அந்நண்பனின் தகப்பனார் குரல் போலவே அச்சாக இருந்தது. அது மறைந்த தனது தந்தையைப்பற்றி அவருக்கு நினைவூட்டி சந்தோஷத்தால் புல்லரிப்பை ஏற்படுத்தியது. அவரது குரலுக்குத்தான் எத்தகைய வியத்தகு சக்தி. ஆச்சரியப்பட்டு "இது எனது தந்தையின் குரல்தான் என்பதில் ஐயமில்லை" என்று கூறிவிட்டு உடனே மேலே சென்று பாபாவின் பாதங்களில் தனது தலையை வைத்து வணங்கினார்.

பின்னர் பாபா இரண்டுமுறை தஷிணை கேட்டார். காலை ஒருமுறையும், அவர்கள் விடைபெறும்போது மாலை ஒருமுறையும். ஆனால் அதை காகாவிடமிருந்து மட்டுமே கேட்டார். அவரது நண்பரைக் கேட்கவில்லை. நண்பர் காகாவிடம் கிசுகிசுத்தார். "இருமுறை பாபா உம்மிடமிருந்து தஷிணை கேட்டார். நான் உம்முடனே இருந்தும் அவர் ஏன் என்னைப் புறக்கணிக்க வேண்டும்?" என்றார். அதற்கு காகா "பாபாவையே கேளும்" என்றார். பாபா, காகாவிடம் அவர் நண்பர் என்ன முணுமுணுக்கிறார் என்று கேட்டார். அப்போது அந்த நண்பரே தாம் ஏதும் தஷிணை கொடுக்கலாமா என்று கேட்டார். பாபாவும் "உமக்குக் கொடுக்கப் பிரியமில்லை எனவே உம்மைக் கேட்கவில்லை, கொடுக்க இப்போது பிரியப்பட்டால் கொடுக்கலாம்" என்று பதிலளித்தார்.

அவர் காகா அளித்த அதே தொகையான பதினேழு ரூபாயை தஷிணையாக அளித்தார். பின்னர் அவரிடம் பாபா பின்வரும் மொழிகளை உரைத்தார். "தேலியின் (கோட்டையின் சுவர் - வேற்றுமை உணர்வு) சுவற்றை இடித்தால் தான் நாம் ஒருவரை ஒருவர் முகத்திற்கு முகம் பார்க்கலாம், சந்திக்கலாம்". பின்னர் பாபா, அவர்கள் புறப்படுவதற்கு அனுமதியளித்தார். வானிலை மப்பாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தபோதும், பாபா அவர்களுக்கு பத்திரமான பிரயாணத்திற்கு உறுதி அளித்தார். இருவரும் சௌக்கியமாக பம்பாய் வந்தடைந்தனர்.

அவர்கள் வீட்டுக்குச்சென்று வீட்டின் கதவு, ஜன்னல்களைத் திறந்தபோது இரண்டு பக்ஷிகள் தரையில் விழுந்து இறந்து கிடப்பதையும், ஒன்று அப்போதுதான் ஜன்னல் வழியே பறந்து சென்றதையும் கண்டனர். ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டுப் போயிருந்தால் இரண்டு பக்ஷிகளும் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவைகள் தங்களது விதியை எய்தின என்றும், மூன்றாவது பக்ஷியைக் காக்கவே பாபா தம்மை அனுப்பியிருப்பதாகவும் அவர் நினைத்தார்.

காகா மஹாஜனியின் எஜமானர்

டக்கர் தரம்ஸி ஜேடாபாஜி என்ற பம்பாய் வக்கீலின் கம்பெனியில் காகா மேலாளராகப் பணியாற்றி வந்தார். முதலாளியும், மேலாளரும் நெருக்கமான பழக்கத்தில் இருந்தனர். காகா அடிக்கடி ஷீர்டி போய்க்கொண்டிருப்பதும் அங்கு சில நாட்கள் தங்குவதும் பாபா அனுமதியளித்ததும், திரும்புவதும் டக்கருக்குத் தெரியும். வேடிக்கையாகவும் பாபாவைச் சோதிப்பதற்காகவுமே, டக்கர் காகாவுடன் ஷிம்கா விடுமுறையின்போது ஷீர்டி போக முடிவுசெய்தார். காகா உடனே திரும்புவது நிச்சயமில்லையாதலால் அவர் தன்னுடன் துணையாக வேறொருவரையும் அழைத்துக்கொண்டார். மூவரும் புறப்பட்டனர். காகா இரண்டு சேர் காய்ந்த திராட்சையை பாபாவுக்கு அன்பளிப்பாக வாங்கினார்.

அவர்கள் உரிய தருணத்தில் ஷீர்டிக்குப் போய் மசூதிக்கு பாபாவின் தரிசனத்தைப் பெறுவதற்காகச் சென்றனர். பாபா சாஹேப் தர்கட் அங்கு இருந்தார். டக்கர் அவரை ஏன் அவ்விடம் வந்தாரென்று விசாரித்தார்.
தர்கட்: தரிசனத்துக்கு
டக்கர்: ஏதாவது அற்புதங்கள் இங்கு நிகழ்கின்றனவா?
தர்கட்: எனது நோக்கம் அதுவல்ல(அற்புதத்தைப் பார்த்தல்). ஆனால் பக்தர்களின் ஆர்வமிக்க பிரார்த்தனைகள் இவ்விடத்தில் திருப்திப்படுத்தப்படுகின்றன.

பின்னர் காகா பாபாவின்முன் விழுந்து நமஸ்கரித்து திராட்சையைச் சமர்ப்பித்தார். பாபா அவைகளை வினியோகிக்கக் கட்டளையிட்டார். டக்கருக்கும் சில கிடைத்தது. அவருக்குத் திராட்சை பிடிக்கவில்லை. மேலும் நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்தாமல் அவைகளைச் சாப்பிடவேண்டாம் என்று டாக்டர்கள் அவருக்குக் கூறியிருந்தனர். எனவே அவர் திகைத்தார். அதை அவர் விரும்பவில்லை. ஒதுக்கித் தள்ளவும் முடியவில்லை. சம்பிரதாயத்துக்காக அவைகளை வாயிலிட்டுக்கொண்டார். ஆனால் விதைகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. மசூதித் தரையில் அவைகளைத் துப்ப அவரால் இயலவில்லை. எனவே அவரது விருப்பத்துக்கு மாறாக அவைகளைத் தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டார்.

பாபா ஒரு ஞானியாயிருந்தால் திராட்சையின் மீது தமக்குள்ள வெறுப்பை அவர் எங்ஙனம் அறியாமலிருந்து அதை உண்ணச்சொல்லி அவரை வற்புறுத்த முடியும் என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டார். இவ்வெண்ணம் அவர் மனதில் எழும்பியதும், பாபா அவருக்கு மீண்டும் சில திராட்சைகளைக் கொடுத்தார். அதை அவரால் உண்ண இயலாமல் கைகளில் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது பாபா அதை உண்ணும்படி அவரைக் கேட்டார். அவரும் கீழ்ப்படிந்தார். அவரது ஆச்சரியத்திற்கேற்ப அவைகளெல்லாம் விதையற்ற திரட்சைகளாயிருந்தன. அற்புதங்களை அவர் காண விரும்பினார். இதோ ஒன்று! பாபா, தனது எண்ணத்தை அறிந்து அவரது விருப்பத்திற்கேற்ப விதையுள்ள திராட்சைகளை விதையற்றவைகளாக மாற்றிவிட்டார் என்பதை அவர் அறிவார்.

எத்தகைய வியத்தகு சக்தி! மேலும் சோதிக்க விரும்பி பக்கத்திலிருந்து தர்கட்டை அவர் எவ்வகைத் திராட்சை வைத்திருக்கிறார் எனக் கேட்டார். அவர் "விதையுள்ள திராட்சை" என்றார். டக்கருக்கு இதைக்கேட்க இன்னும் அதிக வியப்பாயிற்று. தமது வளர்ந்துவரும் நம்பிக்கையை உறுதிப்படுத்த பாபா ஒரு உண்மையான ஞானியானால் திராட்சை காகாவுக்கு முதலில் கொடுக்கப்பட வேண்டுமென நினைத்தார். இவ்வெண்ணத்தையும் படித்தறிந்த பாபா, காகாவிலிருந்து தொடங்கி வினியோகம் செய்யப்படவேண்டுமென ஆணையிட்டார். இந்த நிரூபணங்களெல்லாம் தக்கருக்குப் போதுமானவைகளாய் இருந்தன.

பின்னர் ஷாமா, டக்கரை பாபாவிடம் காகாவின் எஜமானர் என்று அறிமுகப்படுத்தினார்.

பாபா: அவரது எஜமானராக இவர் எங்ஙனம் இருக்க முடியும்? அவருக்கு முழுமையும் வேறொரு எஜமானர் இருக்கிறார்.

காகா இப்பதிலைப் பாராட்டினார். தனது தீர்மானத்தை மறந்துவிட்டு டக்கர் பாபாவை வணங்கிய பின்னர் வாதாவுக்குத் திரும்பினார்.

மத்தியான ஆரத்தி முடிந்ததும் அவர்களெல்லாம் புறப்படுவதற்கு பாபாவின் அனுமதி பெறுவதற்காக மசூதிக்குச் சென்றனர். ஷாமா அவர்களுக்காகப் பேசினார். பின்னர் பாபா இவ்விதமாக உரைத்தார்.

"நிலையற்ற புத்தியுள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் செல்வம், ஆரோக்கியம் முதலியை வாய்க்கப் பெற்றிருந்தான். மனோ வேதனைகளிலிருந்து விடுபட்டவனாக இருந்தான். எனினும் தேவையற்ற கவலைகளையும், பாரங்களையும் தன்மீது போட்டுக்கொண்டு, மன அமைதியை இழந்து இங்குமங்கும் சுற்றித் திரிந்தான். சில சமயம் பாரத்தையெல்லாம் இறக்கிவிட்டும், சில சமயம் அவற்றை மீண்டும் சுமந்தவனாயும் இருந்தான். அவனது மனம் ஒரு உறுதிப்பாட்டையே அறிந்ததில்லை. அவனது நிலைகண்டு நான் இரக்கம் கொண்டேன். அவனிடம் "இப்போது நீ விரும்பும் ஏதாவது ஒரு இடத்தின் (குறிக்கோள்) மீது உனது நம்பிக்கையைத் தயவுசெய்து வைப்பாயாக, ஏன் இவ்வாறு சுற்ற வேண்டும்? அமைதியாக ஏதாவதொரு இடத்தைப் பற்றிக்கொள்" என்று கூறினேன்.

உடனே டக்கர் அப்பொருத்தமான வர்ணனை தமக்குரியதே என அறிந்தார். காக்காவும் தம்முடன் திரும்பவேண்டுமென அவர் நினைத்தார். காகா அவ்வளவு சீக்கிரம் அனுமதிக்கப்படுவார் என்று ஒருவரும் எண்ணவில்லை. பாபா அவரின் இந்த எண்ணத்தையும் படித்தறிந்து காகாவை அவருடைய எஜமானருடனேயே திரும்ப அனுமதியளித்தார். மற்றொருவரின் மனதில் இருக்கும் எண்ணத்தையறியும் பாபாவின் திறமைக்கு மேலுமொரு நிரூபணம் அவருக்குக் கிடைத்தது.

பின்னர் பாபா, காகாவிடமிருந்து ரூ.15 தஷிணையாகக் கேட்டுப்பெற்றார். அவர் காகாவிடம் பின்வருமாறு கூறினார். "எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் தஷிணையாகப் பெற்றுக்கொண்டேன் என்றால் அவர்களுக்குப் பத்து மடங்காகத் திருப்பித்தர வேண்டியிருக்கிறது. நான் ஒருபோதும் எதையும் விலை இல்லாமல் இலவசமாகப் பெறுவது கிடையாது. சீர்தூக்கிப் பாராது நான் யாரிடமிருந்தும் தஷிணை பெறுவதில்லை.

யாரை பக்கிரி (என் குரு) சுட்டிக் காண்பிக்கிறாரோ அவரிடமிருந்து மட்டுமே நான் கேட்கிறேன். யாரேனும் பக்கிரிக்கு முன்பே கடன்பட்டிருந்தால் அவரிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் கணிசமான அறுவடை செய்வதற்கே அவர்கள் இப்போது கொடுப்பதன் மூலம் விதைக்கிறார்கள். தர்மத்தைச் செயல்படுத்துவதில் செல்வம் ஒருவழியாக இருக்கவேண்டும். இது சுய இன்பத்துக்காகப் பயன்படுத்தப்பட்டால் அது வீணாக்கப்படுகிறது.

நீ அதை ஏற்கனவே கொடுத்திருந்தாலொழிய தற்போது அதைப் பெறமுடியாது. எனவே பெறுவதற்கு மிகச்சிறந்த வழி கொடுத்தலேயாம். தஷிணை கொடுத்தல் வைராக்கியத்தை (பற்றின்மை) வளர்க்கிறது. அதன் மூலம் பக்தி, ஞானம் இவற்றை விருத்தி செய்கிறது. ஒன்றைக் கொடுத்துப் பத்தாகத் திரும்பப் பெறுங்கள்".

இம்மொழிகளைக் கேட்டுத் தமது தீர்மானத்தை மறந்தவராய் டக்கர் தாமாகவே ரூ.15ஐ பாபாவின் கைகளில் கொடுத்தார். அவரது எல்லா ஐயங்களும் தீர்க்கப்பட்டு பலவற்றைக் கற்றுக்கொண்டார். ஆதலால் ஷீர்டிக்குத் தாம் வந்தது நன்மையானது என்று அவர் எண்ணினார்.

இத்தகைய விஷயங்களைக் கையாளுவதில் பாபாவின் திறமை தனித்தன்மை வாய்ந்தது. இவைகள் யாவற்றையும் அவர் செய்தபோதும் மொத்தத்தில் இவைகளின் மேல் சாராதவராகவே இருந்தார். யாராவது அவரை வணங்குவதோ,அல்லது வணங்காமலிருப்பதோ, அவருக்குத் தஷிணை கொடுப்பதோ, கொடுக்காமல் இருப்பதோ, இவைகள் எல்லாம் அவருக்கு ஒன்றே. அவர் ஒருவரையும் அவமதிக்கவில்லை. தாம் வணங்கப்படுவதால் அவர் மகிழ்ச்சியடைந்ததில்லை. அன்றி தாம் மதிக்கப்படாததால் அவர் துன்புற்றதுமில்லை. மாறுபட்ட இருமைகளை (சுகம், துக்கம் போன்றவற்றை) அவர் கடந்து நின்றார்.

தூக்கமின்மை வியாதி

பாந்த்ராவில் காயஸ்த பிரபு ஜாதியைச் சேர்ந்த ஒருவர் நெடுநாள் தூக்கமின்மை நோயால் அல்லலுற்றார். அவர் படுக்கையில் படுத்தவுடனே அவரது இறந்துபோன தந்தையார் கனவில் தோன்றி அவரைக் கடுமையாகத் திட்டினார். இது அவரது தூக்கத்தைக் கலைத்து இரவு முழுவதும் அவரை இருப்புக்கொள்ளாமல் செய்தது. ஒவ்வொருநாள் இரவும் இது நடந்தது. அம்மனிதருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருநாள் பாபாவின் பக்தரொருவரை அவர் இவ்விஷயத்தில் கலந்தாலோசித்தார். பிழையாத நிவாரண சஞ்சீவினியாக பாபாவின் உதி ஒன்றையே அவர் அறிவார்.

அவருக்குச் சிறிது உதி கொடுத்து அவர் படுக்கைக்குப் போகும்முன்னர், அதைச் சிறிது நெற்றியிலிட்டுக் கொள்ளும்படியும், அவ்வுதிப் பொட்டலத்தை தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளும்படியும் கூறினார். இந்த சிகிச்சையை அவர் முயன்று பார்த்தார். அவரது பெரும் வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப அவருக்கு நல்ல உறக்கம் ஏற்பட்டது. எவ்விதத் தொந்தரவும் இல்லை. இந்தச் சிகிச்சையையே அவர் தொடர்ந்து பின்பற்றி எப்போதும் சாயியையே நினைவு கூர்ந்தார். பின்னர் சாயிபாபாவின் படம் ஒன்றை பெற்று தனது தலையணைக்கருகில் அதைத் தொங்கவிட்டு அதனை தினந்தோறும் வழிபடத் தொடங்கி வியாழக்கிழமைகளில் பூமாலை, நைவேத்தியம் முதலியவற்றைச் சமர்ப்பித்தார். பின்னர் அவர் சௌக்கியமாகி முந்தைய தொந்தரவையே முழுவதும் மறந்துவிட்டார்.

பாலாஜி பாடீல் நெவாஸ்கர்

இம்மனிதர் பாபாவின் ஒரு பெரும் பக்தர். மிகமிகச் சிறப்பான பற்றற்ற பணியைப் பாபாவுக்கு அவர் செய்தார். ஒவ்வொரு நாளும் ஷீர்டியில் பாபா தமது தினசரி நியமமாக நடந்துவரும் தெருக்கள், பாதைகள் எல்லாவற்றையும் பெருக்கி சுத்தமாக்கினார். அவருக்குப் பின்னர், இப்பணியானது ராதாகிருஷ்ணமாயி என்ற பக்த மாதுவாலும், அதற்குப்பின் அப்துலாலும் அதே அளவு சிறப்புடன் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பாலாஜி கோதுமை அறுவடை செய்தபோது அனைத்தையும் பாபாவுக்குக் கொண்டுவந்து சமர்ப்பித்துவிடுவார். மீதமாக பாபா எதைக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக்கொண்டு தமது குடும்ப சம்ரக்ஷணத்தை செய்தார். இந்நடைமுறையானது அவரால் பல ஆண்டுகள் செய்யப்பட்டு அவருக்குப்பின் அவரது மகனாலும் செய்யப்பட்டது.

உதியின் சக்தியும் செயல் திறமையும்

ஒருமுறை பாலாஜியின் திவசத்தின்போது சில விருந்தினர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்டதைப் போல் மூன்று மடங்குபேர் வந்துவிட்டனர். பாலாஜியின் மனைவி திகைத்துப் போய்விட்டாள். குழுமியிருந்த மக்களுக்கு உணவு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால் குடும்பத்தின் கௌரவம் பாதிக்கப்படும் என்றும் அவள் நினைத்தாள்.

அவளது மாமியார் "பயப்படாதே, அது நம்முடைய உணவல்ல, சாயியினுடையது. ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதியைப்போட்டு ஒரு துணியால் மூடி அதைத் திறக்காமலே அவர்களுக்குப் பரிமாறு! சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார்" என்று கூறித் தேற்றினாள். அவள் கூறியபடியே செய்தாள். தங்களது வியப்புக்கும், மகிழ்வுக்கும் ஏற்ப பரிமாறப்பட்ட உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமாக மீதமும் இருந்ததைக் கண்டார்கள். "ஒருவன் எவ்வளவு அதிகம் மனமார்ந்த அக்கறையுடன் உணர்கிறானோ அவ்வளவு அதிகமாக அவன் செயலுருவாக்கிக் காண்கிறான்" என்னும் மொழி இவ்விஷயத்தில் நிரூபணமாக்கப்பட்டது.**

** என்னுடைய நண்பரும் பாபாவின் பெரிய பக்தருமான B.A.Soukul (First Class Sub-Magistrate) இதைப்போன்ற ஒரு விஷயத்தை என்னிடம் அறிவித்தார். 1943ஆம் ஆண்டு மாசி மாதம், அஹமத்நகர் ஜில்லாவிலுள்ள கர்ஜத்தில் பூஜைத் திருவிழாவும், பொதுஜன விருந்தும் நடந்தது. பின்னைய நிகழ்ச்சிக்கு, விருந்துக்கு அழைக்கப்பட்டதைப் போல் ஐந்து மடங்குபேர் வந்துவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. பாபாவின் அருளால் அனைவரும் வியக்கும் வண்ணம் எவ்வித உணவுக்குறைவும் உணரப்படவில்லை.

சாயிபாபா நாகமாத் தோன்றுதல்

ஒருமுறை ஷீர்டியைச் சேர்ந்த ரகு பாடீல் என்பவர் நெவாசைச் சேர்ந்த பாலாஜி பாடீல் என்பாரிடம் சென்றார். அன்று மாலை மாட்டுத் தொழுவத்தில் ஒரு பாம்பு சீறிக்கொண்டு உள் நுழைவதைக் கண்டார். எல்லா மாடுகளும் பீதியடைந்து நகரத் தொடங்கின. வீட்டினரும் திகிலடைந்தனர். ஆனால் பாலாஜி தனது வீட்டில் சாயியே பாம்பாகத் தோன்றியிருக்கிறார் என எண்ணினார். துளிகூட பயப்படாமல் ஒரு கிண்ணத்தில் பாலை கொண்டுவந்து பாம்பின் முன்வைத்து, "பாபா! ஏன் சீறி சப்தப்படுத்துகிறீர்கள்? ஏன் எங்களைப் பயமுறுத்த விரும்புகிறீர்கள்? இந்தக் கிண்ணத்திலுள்ள பாலை அமைதியான மனதுடன் அருந்துங்கள்" என்று கூறிக்கொண்டே அதனருகில் குழப்பமுறாமல் அமர்ந்தார். மற்றவர்கள் பீதியடைந்தனர். என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் பாம்பு தானாகவே மறைந்து போய்விட்டது. யாருக்கும் அது எங்கு சென்றதெனத் தெரியாது. மாட்டுத் தொழுவத்தில் தேடியும் அது காணப்படவில்லை.**

பாலாஜிக்கு இரண்டு மனைவிகளும், சில குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் சில சமயம் நெவாஸில் இருந்து பாபாவின் தரிசனத்துக்காக ஷீர்டிக்கு வருவர். அப்போது பாபா சேலையும் மற்ற உடைகளும் வாங்கி அவைகளைத் தமது ஆசியுடன் அவர்களுக்கு அளிப்பார்.

(** கோயம்புத்தூரில் இதே மாதிரியாக 1943 தை 7ஆம் தேதி வியாழன் மாலை 3:30 மணிக்கு பாபா பாம்பாகத் தோன்றிய விவரம் சாயிசுதா சஞ்சிகையில் (தொகுப்பு 3 , எண் 7&8 , ஜனவரி 1943 , பக்கம் 26) பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. அங்கு அப்பாம்பு பஜனையைக் கேட்டது. மலரையும், பாலையும் ஏற்றுக்கொண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தன்னைக் காணவும், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தது. போட்டோ எடுப்பதற்காக பாபாவின் படம் அதன் அருகில் வைக்கப்பட்டது. படமும், பாம்பும் போட்டோவில் மிகச்சிறப்பாக பதிந்திருக்கிறது. விவரங்களுக்கும், போட்டோவுக்கும் வாசகர்கள் மேற்குறித்த சாயிசுதாவை காண்க.)

ஸ்ரீ சாயியைப் பணிக
அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்

No comments:

Post a Comment