Sunday, August 1, 2021

குத்துச் சண்டையை மறக்காத வட சென்னை: பழங்காலத்தை அசைபோட வைத்த ‛சார்பட்டா!


முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனநிலையில் மிதக்கின்றனர், வட சென்னை பெரியவர்கள். குத்துச்சண்டை குறித்து கூடி பேசுகின்றனர். சார்பட்டா பரம்பரை படத்தின் தாக்கம் அது.

குத்துச்சண்டை அறிந்த சிலர் இணைந்து, 60 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்திய குழுவின் பெயர் சார்பட்டா. இவர்கள் பயிற்சி கொடுத்து, பல இளைஞர்களை 'பாக்சர்'களாக உருவாக்கினர். இதைப்பார்த்து இடியப்ப நாயக்கர் குழு உருவாகிறது. அடுத்து சூளை எல்லப்ப செட்டி, சுண்ணாம்பு குளம் கிராமணி, முனியப்ப பிள்ளை என, பல குழுக்கள் உருவாகின.

சார்பட்டா பரம்பரை ஏரியா ராயபுரம், மாடர்ன் லைன், சிமெட்ரி ரோடு, வியாசர்பாடி, காசிமேடு, பனைமர தொட்டி, டோல்கேட், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி வரை இருந்துள்ளது.

இடியப்ப நாயக்கர், எல்லப்ப செட்டியார் பரம்பரை ஏரியாக்களாக, சூளை, புளியந்தோப்பு, அடையாறு, இந்திரா நகர் இருந்துள்ளது.
இந்த குழுக்களில் பயிற்சி பெற்றவர்கள் திறமையை வெளிப்படுத்த போட்டிகள் துவங்கின. எட்டுக்கு எட்டு என பள்ளம் தோண்டி, அதில் சண்டை போட்டவர்கள், பின் மேடை ஏறி மோத, களம் வாய்த்தது. அந்த போட்டிகளை காண விளம்பரம் செய்தனர். ரசிகர்கள் டிக்கெட் வாங்கி வர ஆரம்பித்தனர்.
விளையாட்டு போட்டியில் வெற்றி, தோல்வி சகஜம் என்ற நிலையே முதலில் இருந்தது. போட்டி அதிகமாகி, டிக்கெட் வருமானமும் உயர்ந்தபோது, யார் ஜெயிப்பார் என, பந்தயம் கட்டும் பழக்கம் அறிமுகமாகி, நாள்போக்கில் 'பாக்சிங்' சூதாட்டமும் உதயமானது. வீடு, நிலம், படகுகளை வைத்து பந்தயம் கட்டுவது வரை, சூதாட்டம் விஸ்வரூபம் எடுத்த கதைகளும் உண்டு.

பரம்பரை என்பது, ஜாதி, மதத்தை குறிக்கும் வார்த்தை அல்ல. குழு அல்லது 'டீம்' என்று சொல்வதையே அப்போது பரம்பரை என்று அழைத்துள்ளனர். சுந்தர்ராஜ், லோகநாதன், மோகன், துரைக்கண்ணு, துரைராஜ், சித்தேரி முத்து, ஜெயவேல், சுந்தர், பாபு, ஐ.ஓ.சி., ராஜா, டைகர் தயாநிதி, மாடசாமி, ஆறுமுகம். தேசிங்கு, மாசி, மதிவாணன், பக்தவத்சலம், 'பாக்ஸர்' வடிவேலு, ஆட்டி அருணாசலம் என, பல பெயர்களை மறக்காமல் வரலாறுடன் விவரிக்கின்றனர் வட சென்னை பெரியவர்கள்.
பக்தவத்சலம் கூறியதாவது: நான் இடியப்ப நாயக்கர் பரம்பரை. சார்பட்டா பரம்பரை காரங்க, அவங்களுக்குள்ள மோத மாட்டாங்க. எல்லப்ப நாயக்கர், எங்க இடியப்ப நாயக்கர் இந்த மாதிரி வேற பரம்பரைல தயாரான, பாக்சரோட தான் மோதுவாங்க. ஜல்லிக்கட்டுக்கு காளைய தயார் செய்ற மாதிரி தான், போட்டிக்கு முன்ன பாக்சர்கள முறுக்கேத்துவோம். ஆக்ரோஷமா சண்டை போடுவோம். சில பேர் குத்து தாங்காம செத்தே போயிருக்காங்க. ஆனா 'ரிங்'க விட்டு இறங்கிட்டா எல்லாரும், 'ப்ரண்ட்ஸ்' தான்.

சச்சரவு இல்லாத போட்டியா?

ஒண்ணு ரெண்டு தபா கலாட்டா ஆயிருக்கு. நானே சார்பட்டா ஆளு சுந்தர்ராஜு கூட மோதினேன். எம்.ஜி.ஆர்., வந்திருந்தார். 'பாயின்ட்' கணக்குலயும், 'நாக் அவுட்' முறைலயும் நான் தான் ஜெயிச்சேன். ஆனா, சுந்தர்ராஜ் வெற்றின்னு அறிவிச்சுட்டாங்க. ஒரே ரகளையா போச்சு. எம்.ஜி.ஆர்., தலையிட்டு, 'சுந்தர்ராஜுக்கு வழங்கப்பட்ட பரிசு விருதுக்கு சமமா, நானே உனக்கும் தந்து விடுகிறேன்'னு சொன்னார். அதோட எல்லாம் 'சைலன்ட்' ஆயிட்டாங்க. இவ்வாறு அவர் கூறினார்.
'நாக் அவுட்' ஆறுமுகம் பற்றி பலரும் சொன்னார்கள்; அவருடனும் பேசினோம். அவர் கூறியதாவது: பாக்சிங்ல ரொம்ப முக்கியம் பயிற்சிதாங்க. 'பஸ்ட்' எவ்ளோ பலமான, 'பஞ்ச்' விழுந்தாலும், தாங்ற மாதிரி உடம்ப இரும்பாக்கணும். அப்புறமாதான் பஞ்ச் குடுக்றது. ஒவ்வொரு அடியும் இடியா எறங்கணும். ரொம்ப சிரமப்பட்டு ரெண்டுக்கும் பயிற்சி எடுத்தேன். அதனால் தான் 125 போட்டில கலந்துகிட்டு, 100ல் சாம்பியன் ஆக முடிஞ்சுது. இத கேட்டுத்தான் சார்பட்டா படம் எடுத்தாங்களாம். படத்துல ஒரு 'சீன்'ல வருவேன்.
சுவாரஸ்ய சம்பவம்

புதுச்சேரில இருக்கிற மாமா பொண்ண, 'லவ்' பண்ணினேன். பத்தாயிரம் கொடுத்தா தான், மகள தருவேன்னு சொல்லிட்டார். 1970ல அது பெரிய தொகை. நமக்கு பாக்சிங் தவிர எதும் தெரியாது. 20 போட்டில ஆடி பத்தாயிரம் சேத்துட்டேன். ஆனா... பயிற்சிக்காக ஒரு தென்ன மரத்துல, ரெண்டு கையாலயும் பஞ்ச் விட்டுகிட்டே இருந்தேன். மனுசனா இருந்தா செத்திருப்பான். மரமா கண்டு, 'டெய்லி' அடிச்சும் தாங்குச்சு. ஒரு நாள் கரகர சத்தத்தோட மரம் முறிஞ்சு, பக்கத்து கொட்டாய் மேல சாஞ்சுட்டுது. 'தென்ன மரத்தயே குத்தி சாச்சவன், உன் மேல கோவத்த காட்னா உன் கதி என்னா?'ன்னு பொண்ணு கிட்ட கேட்ருக்கார் எங்க மாமா. உடனே, அய்யோ அந்தாளு வேணாம்னு சொல்லிட்டா அவ. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.

கடந்த 1964லிருந்து, 1989 வரை வெல்ல முடியாத வீரராக இடியப்ப நாயக்கர் பரம்பரையை சேர்ந்த பாக்ஸர் பக்தன் கோலோச்சிஇருக்கிறார். அதே போல சார்பட்டா பரம்பரையை சேர்ந்த பாக்ஸர் ஆறுமுகம், இடியப்ப நாயக்கர் பரம்பரையை சேர்ந்த பக்தன், கே.ஜி.சண்முகம், டில்லிபாபு போன்ற சீனியர்களுடன் மோதி, 'டிரா' செய்திருக்கிறார்.

மதிவாணனும் சார்பட்டா பரம்பரை தான். தமிழகத்தில் இருந்து சர்வதேச போட்டிக்கு சென்ற முதல் பாக்சர். பரிசுகளை அள்ளியவர்.
மதிவாணன் தன் அனுபவம் பற்றி கூறியதாவது: ஒரு கால கட்டம் வரை போட்டி ஆரோக்கியமாகத் தான் நடந்தது. அப்புறம் வன்மமாக மாறிவிட்டது. போட்டி நாள் வரை, பாக்சர்களை வெளியிலேயே போக விட மாட்டார்கள். சாப்பாட்டில், சர்பத்தில் ஏதாவது கலந்து கொடுத்து விடுவார்களோ என்ற பயம் இருந்தது. விளையாட்டு, கலை என்பதை தாண்டி பாக்சிங் வேறு கட்டத்துக்கு போன பின், பலருக்கு அதில் ஆர்வம் குறைந்து விட்டது.
பாக்சிங் நின்றது ஏன்?

பிரபலமாக இருந்த, 'பாக்ஸர்' வடிவேலுவுடன் மோத தயாரா என, சிலர் சவால் விட்டனர். நானும் சரி என்றேன். நான் 60 கிலோ ஒல்லி தேகம். வடிவேலு 85 கிலோ குண்டு உடம்பு. போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என எல்லாரும் காத்திருந்தனர். அப்போது, ஒரு பத்திரிகை நிருபர் கொலை வழக்கில் வடிவேலு கைதானார்; ஊரே பரபரப்பானது. போலீஸ் கமிஷனர் வந்து விசாரித்தார். 20 நாளில் நடக்க இருந்த போட்டிக்கு தடை விதித்தார். அதோடு, வட சென்னை, 'பாக்சிங் டோனமென்ட்' முடிவுக்கு வந்து விட்டது. போட்டி நடந்திருந்தால் ஜெயித்திருப்பேன்; அதில் வருத்தம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

பிரபல பாக்சர் சண்முகத்தின் மகன் கருணாநிதி, குத்துச் சண்டை பயிற்சி கொடுக்கிறார்.
ஒரு சம்பவம் பற்றி அவர் கூறியதாவது: கியூபா நாட்டைச் சேர்ந்த நாட் டெர்ரி என்பவர், சென்னை வந்து குத்துச் சண்டை பயின்று போட்டிக்கு தயாரானார். 'தோற்றால், சுட்டு விடுவேன்' என சொல்லி உசுப்பேற்றி வைத்திருந்தார் அவரது அண்ணன். அந்த பயத்திலேயே ஒவ்வொரு போட்டியிலும் எதிராளியை புரட்டி எடுத்தார் டெர்ரி. ஒருமுறை, 'ஆட்டி' அருணாசலம் என்ற இடியப்ப நாயக்கர் பரம்பரை வீரர் டெரியுடன் மோதினார். முதல் இரண்டு ரவுண்டில் அருணாசலத்தின் அடி தாங்காமல் விழுந்த டெரிக்கு, திடீரென அண்ணன் துப்பாக்கி நினைவுக்கு வந்தது.அவ்வளவு தான், மூன்றாவது ரவுண்டில், அவர் கொடுத்த மூர்க்கமான 'பஞ்சில் நாக் அவுட்' ஆன , 'ஆட்டி' அருணாசலம் எழுந்திருக்கவே இல்லை; இறந்து விட்டார்.
பசுமை நினைவு

சில மாதங்கள் கழித்து, சித்தேரி முத்து என்பவர், டெரியின் வியூகங்களை உடைத்து அவரை வீழ்த்தினார். அவருக்கு, 'திராவிட வீரன்' என பெயர் சூட்டினார்ஈ.வெ.ராமசாமி. பல நாடுகளில் இருந்து பிரபலமான பாக்சிங் சாம்பியன்கள் வந்து, வட சென்னையில் மேடையேறி மோதி இருக்கின்றனர். உலக சாம்பியன் முகமது அலி, வடசென்னை பாக்சர்களின் கனவு கண்ணன். எம்.ஜி.ஆர்., தன் சொந்த செலவில் அலியை சென்னைக்கு வரவழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியது, இந்தப் பகுதி மக்கள் மனதில் பசுமை யாக நினைவிருக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment