ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள். எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்ப்போம் என்றார் தந்தை. மறுநாள் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞனை மகள் அழைத்து வந்தாள். அவனை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
இளைஞன் குழப்பத்தோடும், பரபரப்போடும் இருந்தான். அவன் பக்கத்தில் சில துடைப்பகுச்சிகள் சிதறிக் கிடந்தன. இளைஞன் ஒரு துடைப்பக் குச்சியை எடுத்து துண்டு துண்டாக உடைத்துக் கீழே போட்டான். பிறகு ஒவ்வொரு துடைப்பக் குச்சியையும் எடுத்து துண்டு துண்டாக உடைத்துப் போட்டான். சற்று நேரம் கழித்து செல்வந்தர் தன் மகளோடு அங்கே வந்து சேர்ந்தார். இளைஞனை நோக்கி உன்னைச் சோதிப்பதற்க்காகத்தான் இந்த துடைப்பக் குச்சிகளை இங்கே போட்டிருக்கிறேன். இவைகளை எடுத்து அதோ இருக்கும் துடைப்பத்தோடு சொருகி வைத்து இருக்கலாம். அல்லது இவற்றை ஒழுங்காக சேர்த்து பக்கத்தில் வைத்து இருக்கலாம்.
நீயோ, இவற்றை துண்டு துண்டாக உடைத்து ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் ஆக்கிவிட்டாய். நான் பாடுபட்டு சேர்த்த செல்வம் உன் கையில் கிடைத்தால் என்ன ஆகும்? இந்தக் குச்சிகளை உடைத்து வீணாக்கியதைப் போல என் செல்வத்தையும் வீணாக செலவு செய்து காலியாக்கி விடுவாய். அதனால் உன்னை நல்ல தகுதி உடையவனாக ஆக்கிக் கொண்ட பிறகு என்னை வந்து சந்தித்துப் பேசு என்றார். இளைஞன் தலை கவிழ்ந்தவாறு எழுந்து சென்றான். செல்வந்தரின் மகளும் தந்தை கூறிய நியாயத்தைப் புரிந்து கொண்டாள்.
No comments:
Post a Comment